தேசிய ஷூரா சபையின் சுதந்திர தினச் செய்தி

தேசிய ஷூரா சபையின் சுதந்திர தினச் செய்தி

 

74 ஆவது சுதந்திர தினத்தை நாம் அனைவரும் கொண்டாடுகிறோம். இது மகிழ்ச்சியான தருணமாகும். இன்னொரு வகையில் எம்மை நோக்கி பல வினாக்களை தொடுத்து தீர்க்கமான பதில்களைத் தேடவேண்டிய சந்தர்ப்பமாக இதனை நாம் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் சுதேச அரசர்களால் நீண்ட காலமாக ஆளப்பட்ட நம் தாய்நாடு, சுமார் நான்கு நூற்றாண்டுகளாக அந்நியவர்களது ஆதிக்கத்தில் இருந்தது. எமது வளங்களைச் சுரண்டிய அவர்கள் எமது கருத்து சுதந்திரத்தைப் பறித்தார்கள். எம்மீது தமது கொள்கைகளையும் திட்டங்களையும் புகுத்தினார்கள். அவர்களிற் சிலர் பிரித்தாளும் கொள்கையை எமக்குள் நடைமுறைப்படுத்தி எம்மை சின்னா பின்னப் படுத்தினார்கள்.

அப்படியான நிலையில் இருந்து கடந்த நூற்றாண்டில் நாம் விடுதலை அடைந்தோம். இது மகிழ்ச்சியான செய்தி தான்.

ஆனால், சுதந்திரத்திரமடைந்தது முதல் தற்போது வரைக்கும் நாம் எம்மை ஒழுங்கு படுத்திக் கொள்ளவில்லை. வடக்கு கிழக்கில் தமிழ் இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டத்தால் பல லட்சம் பேரை நமது நாடு இழந்தது. கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் அழித்தொழிக்கப்பட்டன. தெற்கில் சிங்கள இளைஞர்கள் அதிருப்தியடைந்து கிளர்ச்சி செய்ததால் நாடு மற்றுமொரு இரத்தக் களறியைக் கண்டது. சில விஷமிகளால் முஸ்லிம் இளைஞர்கள் பகடைக் காயங்களாகப் பயன்படுத்தப்பட்டதால் முஸ்லிம் சமூகமும் நம் தேசமும் பல விரும்பத்தகாத விளைவுகளை சந்தித்தது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் தமது சுய நலன்களை அடைந்து கொள்ள சமுதாயங்களை பிழிந்து வளங்களை சுரண்டி யிருக்கிறார்கள்.

தற்போது நாடு பயங்கரமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. பொதுவாக இன்று நாடு திருப்திகரமான நிலையில் இல்லை. அதற்கு காரணம் நாம் சுதந்திரத்திற்குப் பின்னர் எம்மை ஒழுங்குபடுத்திக் கொள்ளவில்லை. ஆட்சியாளர்கள் மாறினார்களே தவிர எமது மனப்பாங்குகளில் மாற்றம் ஏற்படவில்லை என்பது கவலையான செய்தியாகும்.

தற்போது முஸ்லிம் சமூகத்தின் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. அதன் இஸ்லாம் பாட திட்டம், தனியார் சட்டம், மார்க்கக் கலாநிலையங்கள், சமூக சேவை நிறுவனங்கள் சந்தேகத்தோடும் அச்சத்தோடும் பார்க்கப்படுகின்றன.

இந்நாட்டில் ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் சமூகம் இவ்வாறான நெருக்கடிகளை மிக கொடூரமான முறையில் சந்திக்கின்ற ஒரு கால பிரிவாக இது இருக்கிறது.

எனவே, சுதந்திரத்தைக் கொண்டாடுகின்ற இந்த சூழலில் நாம் அனைவரும் இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் இருந்து வெளியேறுவதற்கு பரஸ்பரம் ஒத்துழைத்துக் கொள்வதோடு தேச நிர்மாணப் பணியில் பாகுபாடுகளை மறந்து செயல்பட வேண்டுமென்று தேசிய சூரா சபை வினயமாக கேட்டுக் கொள்கிறது.

பரஸ்பரம் மற்றவர்களை மதித்து அவர்களுக்குரிய அடிப்படையான உரிமைகளை வழங்கி இந்நாட்டை கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் பங்கெடுப்பாமாக!

ஓர் இனத்தின் பலவீனம் முழு தேசத்தையும் பாதிக்கும் என்ற வகையில் அனைத்து இனங்களையும் அரவணைத்து இயங்கும் சகோதரத்துவ உணர்வோடு கூடிய மனப்பாங்கு இன்றைய காலத்தின் தேவை என்பதும் ஒவ்வொரு பிரிஜையும் இனமும் தத்தமது பங்களிப்பை தேச நிர்மாணத்திற்காக செய்ய வேண்டும் என்பதும் தேசிய சூரா சபையின் சுதந்திர தின எதிர்பார்ப்பாகும்.

ரீ.கே.அஸூர்
தலைவர்
தேசிய ஷூரா சபை

4.2.2022

شبكة سيلان الإخبارية

أول موقع عربي مستقل من جمهورية سريلانكا ويهتم بنشر ما هو جديد ومفيد على مدار الساعة من أخبار سريلانكا والمالديف ودول جنوب آسيا والعالم.

اترك تعليقاً

لن يتم نشر عنوان بريدك الإلكتروني. الحقول الإلزامية مشار إليها بـ *